search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிக்ஸன் நிறுவனம்"

    எரிக்ஸன் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்த முடியாமல் கடும் நெருக்கடியில் இருந்த அனில் அம்பானியை கடைசி நேரத்தில் அவரது சகோதரர் முகேஷ் அம்பானி காப்பாற்றியுள்ளார். #AnilAmbani #MukeshAmbani #Ericsson
    புதுடெல்லி:

    ஸ்வீடன் நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்ஸன், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள், சேவைகள் அளிக்க ரூ.2014-ம் ஆண்டு 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ரிலையன்ஸ் நிறுவனம் தர வேண்டி இருந்தது.

    இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.45 ஆயிரம் கோடி கடனில் இருப்பதால், உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின்படி, ரூ.550 கோடி பெற்றுக்கொள்ள எரிக்ஸன் நிறுவனம் சம்மதித்தது. கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ரூ.550 கோடியை வழங்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 120 நாட்கள் அவகாசத்தை அளித்தது. அதாவது செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரூ.550 கோடியை எரிக்ஸன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும்.

    இந்த தொகையை செப்டம்பர் 30-ம்தேதிக்குள் செலுத்துவதாக ரிலையன்ஸ் நிறுவனமும் உறுதியளித்து இருந்தது. ஆனால், அந்த தேதி முடிவடைந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் அந்தத் தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்குச் செலுத்தவில்லை. இதையடுத்து, எரிக்ஸன் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி, மற்ற இரு அதிகாரிகள் மீது தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களும் குற்றவாளி என அறிவித்தது. மேலும், 4 வார காலத்திற்குள் எரிக்ஸன் நிறுவனத்திற்கு ரூ.453 கோடியை வழங்க வேண்டும் என்றும் இல்லாவிடில், 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தெரிவித்தது.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும்  (19-ம் தேதி)க்குள்  எரிக்ஸன் நிறுவனத்திற்கு 453 கோடி ரூபாய் வழங்காவிட்டால், சிறைக்கு செல்ல வேண்டிய இக்கட்டான நிலைக்கு அனில் அம்பானி தள்ளப்பட்டுள்ளார்.  

    453 கோடியை திரட்டுவதற்காக, அனில் அம்பானி பல்வேறு விதத்திலும் முயன்று வந்தார். இதற்கிடையில், வரியாக செலுத்திய 260 கோடி ரூபாயை திரும்ப வழங்க எஸ்பிஐ உள்ளிட்ட  நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் நிராகரித்தது.

    இந்நிலையில், அவருக்கு அளித்த கெடு இன்றுடன் (19-ம் தேதி) முடிவடைய இருந்தது.  இதையடுத்து, அனில் அம்பானி, கோர்ட் உத்தரவுப்படி, பணம் செலுத்துவாரா அல்லது பணம் செலுத்த முடியாமல் சிறை செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், நேற்றிரவு ரிலையன்ஸ் குழுமம், எரிக்ஸனுக்கு செலுத்த வேண்டிய, 453 கோடி ரூபாயை செலுத்தி, அனில் அம்பானியை நெருக்கடியில் இருந்து மீட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை எரிக்ஸன் நிறுவனமும் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



    நெருக்கடியான நேரத்தில் எரிக்ஸன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை வழங்க அனில் அம்பானியின் மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி உதவியுள்ளார். இதையடுத்து, தனது சகோதரர் முகேஷ் அம்பானிக்கும், முகேஷ் அம்பானி மனைவி நீடா அம்பானிக்கும் அனில் அம்பானி நன்றி தெரிவித்துள்ளார்.  “நெருக்கடியான நேரத்தில் எனக்கு உறுதுணையாக நின்று தக்க நேரத்தில் உதவியதற்கு  மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என அனில் அம்பானி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.  #AnilAmbani #MukeshAmbani  #Ericsson

    ×